×

கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிட பரிசீலனை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில், கல்வி சம்பந்தமான திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.முத்தப்பன், கடந்த 2022-23ம் கல்வியாண்டு வரை பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் இது சம்பந்தமாக அரசு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. எனவே, கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.வெங்கடேஷ்குமார், 2024-25ம் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவதற்கான அனுமதி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்களை திரையிடுவது தொடர்பான கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

The post கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிட பரிசீலனை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...